அரையிறுதி 'ரேசில்' நீடிக்கிறதா பாகிஸ்தான்?- உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை.. ஒரு பார்வை
|அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அடிலெய்டு,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ராகுல் சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது.
போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 15 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதனால் தற்போது குரூப் பி புள்ளி பட்டியலில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. 2-வது இடத்தில் 5 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது.
லீக் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே இடையே கடும் போட்டி நிலவுகிறது.
4 புள்ளிகளுடன் வங்காளதேச அணி 3-வது இடத்திலும், 3 புள்ளிகளுடன் ஜிம்பாப்வே அணி 4-வது இடத்திலும் நீடிக்க, பாகிஸ்தான் 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற தற்போதும் சில சாத்தியங்கள் உள்ளது.
முதல் சாத்தியம்:-
அதன்படி பாகிஸ்தான் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக) கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி நெதர்லாந்திற்கு எதிராக தோல்வியடைய வேண்டும். நெதர்லாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.
2-வது சாத்தியம்:
பாகிஸ்தான் அணி அதன் இரண்டு போட்டிகளிலும் (தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். மேலும் இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக மிக பெரிய தோல்வியை சந்தித்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் புள்ளி ஒரே நிலையில் (6 புள்ளிகள்) இருக்கும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும்.