< Back
கிரிக்கெட்
ஷாஹீன் அப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருக்கும்- கவாஸ்கர்

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

ஷாஹீன் அப்ரிடி காயம் அடையாவிட்டாலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருக்கும்- கவாஸ்கர்

தினத்தந்தி
|
13 Nov 2022 8:40 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஷாஹீன் அப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நிறைவடைந்துள்ளது. மெல்போர்னில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அசத்திய சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 138 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் அதிரடியால் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இருப்பினும் இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பட்லர், பில் சால்ட் அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற அதிரடியா வீரர்கள் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி வெற்றி தேடி கொடுத்தார்.

இங்கிலாந்து சேசிங்யின் போது 13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. இதனால் அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும் என சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஷாஹீன் அப்ரிடி பற்றி கவாஸ்கர் கூறுகையில், " அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றால் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருக்கும் என நான் கருதவில்லை. ஏனென்றால் அவர்கள் போதுமான ஸ்கோரை அடிக்கவில்லை. அவர்கள் 15-20 ரன்கள் குறைவாக அடித்து இருந்தனர். பாகிஸ்தான் 150-155 ரன்களை எடுத்திருந்தால், அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஷாஹீன் வீசாத 10 பந்துகள் அவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை ஷாஹீன் பந்துவீசி இருந்தால் பாகிஸ்தானுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்திருக்கும், ஆனால் இங்கிலாந்து தான் வெற்றி பெற்றிருக்கும்," என்றார்.

மேலும் செய்திகள்