< Back
கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லக்கூடாது: ஜாவித் மியாண்டட்
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லக்கூடாது: ஜாவித் மியாண்டட்

தினத்தந்தி
|
20 Jun 2023 1:42 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஜாவித் மியாண்டட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2012-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதன் பிறகு 2016-ம் ஆண்டும் சென்றது. இப்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு (2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்றதில்லை) வந்து விளையாட வேண்டிய நேரமாகும். ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள்.

நான் முடிவு எடுக்கும் இடத்தில் இருந்தால், எந்த ஒரு ஆட்டத்தில் விளையாடுவதற்காகவும் ஏன் உலகக் கோப்பை போட்டிக்கு கூட இந்தியாவுக்கு செல்லமாட்டேன். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் விளையாட தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் ஒரு போதும் அத்தகைய ஆர்வம் காட்டுவதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரியது. இன்னும் தரமான வீரர்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். எனவே இந்தியாவுக்கு சென்று விளையாடாவிட்டாலும் கூட எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.

நான் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம், கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அதில் அரசியல் கலக்கக்கூடாது. விளையாட்டு கருத்துவேறுபாடுகளையும், தவறான புரிதலையும் களைந்து இரு நாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக இருக்கும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மீண்டும் மறுத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மியாண்டட் கூறினார்.

மேலும் செய்திகள்