மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் - வெளியான அறிவிப்பு
|பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்
லாகூர்,
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து அந்த அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த பாபர் அசாம் நீக்கப்பட்டு 20 ஓவர் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட்ஸ்மேன் ஷான் மசூத்தும் நியமிக்கப்பட்டனர். ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டன் யாரும் நியமிக்கப்படவில்லை.
சமீபத்தில் புதிய தலைவராக தேர்வான மொசின் நக்வி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்துக்கு ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத் ஆகியோரின் கேப்டன்ஷிப் செயல்பாடு மீது திருப்தியில்லை. இதனால் மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக கொண்டு வர அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சி முகாம் காகுலில் நடந்து வருகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள கேப்டன் ஷகீன் ஷா அப்ரிடியிடம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோ, தேர்வாளர்களோ கேப்டன்ஷிப் மாற்றம் குறித்து எதுவும் பேசவில்லை எனவும், இதனால் விரக்தி அடைந்துள்ள ஷகீன் ஷா அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக பாபர் அசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வெள்ளை பந்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பி.சி.பி-யின் தேர்வுக் குழுவின் ஒருமித்த பரிந்துரையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20) கேப்டனாக பாபர் ஆசாமை பி.சி.பி தலைவர் மொசின் நக்வி நியமித்துள்ளார் என பதிவிடப்பட்டுள்ளது. இதனால் பாபர் அசாம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.