பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்; முல்தான் சுல்தான் அணி உரிமையாளர் தற்கொலை
|பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான முல்தான் சுல்தான் அணி உரிமையாளர் தற்கொலை செய்து உள்ளார்.
கராச்சி,
இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது போன்று பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், முல்தான் சுல்தான் என்ற அணியும் ஒன்று. இதன் உரிமையாளராக ஆலம்கீர் தரீன் (வயது 63) என்பவர் இருந்து வந்து உள்ளார். தொழிலதிபராகவும் உள்ள அவர் லாகூர் நகரின் குல்பர்க் பகுதியில் வசித்துள்ளார்.
பிரபல யேல் பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவரான அவர், தெற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்) பகுதியில் முன்னணி தொழிலதிபராக இருந்து வந்து உள்ளார். நாட்டின் பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றையும் அவர் நடத்தி வந்து உள்ளார்.
இந்நிலையில், வீட்டில் வைத்து அவர் தற்கொலை செய்து உள்ள தகவல் உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. இதற்கான பின்னணி பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. முல்தான் சுல்தான் அணியின் சி.இ.ஓ. ஹைதர் அசார் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர், தரீனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்து உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் அந்த அணி முதன்முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தது.