டிராக்டரை விற்று டிக்கெட் வாங்கினேன்... இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை கண்டு மனம் உடைந்த பாக். ரசிகர்
|இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசி, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
முதலில் ஆடிய இந்தியா 119 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்துவீசி, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற, பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில், பாகிஸ்தான் 11 ரன்களே எடுத்தது. இந்த போட்டியின் முடிவைப் பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவுடன் மோதும் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் டிராக்டரை விற்று டிக்கெட் வாங்கியிருக்கிறார். ஆனால், பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பார்த்து மனம் உடைந்துபோனார்.
இதுபற்றி அந்த ரசிகர் கூறுகையில், "3000 டாலர் மதிப்புள்ள டிக்கெட் வாங்குவதற்காக எனது டிராக்டரை விற்றுவிட்டேன். போட்டியில் முதலில் ஆடிய இந்தியாவின் ஸ்கோரை பார்த்தபோது, நாங்கள் (பாகிஸ்தான்) தோல்வியடைவோம் என நினைக்கவில்லை. ஆட்டம் எங்கள் வசம் இருந்தது. ஆனால், பாபர் அசாம் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் மனமுடைந்தனர். இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்றார்.