< Back
கிரிக்கெட்
இந்தியாவை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் நம்பவில்லை - இங்கிலாந்து முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் நம்பவில்லை - இங்கிலாந்து முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
11 Jun 2024 10:38 PM IST

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய பும்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதை அடுத்து பாகிஸ்தானை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது கருத்தை கூறியுள்ளார். அதில் அவர் பிட்ச், சுமாராக பேட்டிங் என்பனவற்றைத் தாண்டி இந்தியாவை உலகக்கோப்பை போட்டியில் நம்மால் வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் அணியினர் நம்பவில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாகிஸ்தான் அணியால் இந்தியாவை தோற்கடிக்க முடியவில்லை. அதாவது அவர்கள் கொஞ்சம் சவாலான பிட்ச்சில் 120 ரன்களை மட்டுமே சேசிங் செய்தனர். பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது இருந்ததை விட இந்தியா பேட்டிங் செய்த போது பிட்ச் கொஞ்சம் அதிக சவாலை கொடுத்தது என்று சொல்வேன்.

இந்தியா பேட்டிங் செய்த போது பிட்ச்சில் பந்து நின்று வந்தது போல் தெரிந்தது. ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது அது நன்றாகவே இருந்தது. ஆனாலும் அவர்களால் 120 ரன்களை எடுக்க முடியவில்லை. இதுவே அந்தப் போட்டியின் என்னுடைய அடிப்படை சுருக்கமாகும். உண்மையில் இந்தியாவை நம்மால் வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் நம்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்