பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசாத் ஷபிக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு
|சர்வதேச போட்டிக்கு தகுந்த உடல் தகுதியுடன் இல்லாததால் ஓய்வு முடிவை எடுத்ததாக ஆசாத் ஷபிக் தெரிவித்தார்.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசாத் ஷபிக் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 37 வயது பேட்ஸ்மேனான ஆசாத் ஷபிக் கடைசியாக 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டியான தேசிய லீக் 20 ஓவர் போட்டியில் கராச்சி ஒயிட்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். அந்த அணி நேற்று முன்தினம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் கிரிக்கெட் விளையாடுவதற்குரிய உற்சாகமும், ஆர்வமும் குறைந்து விட்டதாகவும், சர்வதேச போட்டிக்கு தகுந்த உடல் தகுதியுடன் இல்லாததாலும் ஓய்வு முடிவை எடுத்ததாக ஆசாத் ஷபிக் தெரிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வாளருக்கான ஒப்பந்தம் தனக்கு கிடைத்து இருப்பதாகவும், அது விரைவில் செயல்முறைக்கு வரும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறினார்.
ஆசாத் ஷபிக் 77 டெஸ்டில் ஆடி 12 சதம் உள்பட 4,660 ரன்களும், 60 ஒருநாள் போட்டியில் 1,336 ரன்னும், 10 இருபது ஓவர் போட்டியில் 192 ரன்னும் எடுத்துள்ளார்.