< Back
கிரிக்கெட்
நிஜமான மிஸ்டர் பீன் எங்களிடம் இல்லை ஆனால்...- ஜிம்பாப்வே அதிபருக்கு பாகிஸ்தான் பிரதமர் பதிலடி

Image Courtesy: Twitter @ICC/ AFP 

கிரிக்கெட்

"நிஜமான மிஸ்டர் பீன் எங்களிடம் இல்லை ஆனால்..."- ஜிம்பாப்வே அதிபருக்கு பாகிஸ்தான் பிரதமர் பதிலடி

தினத்தந்தி
|
28 Oct 2022 6:01 PM IST

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

கராச்சி,

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது.

சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் பாகிஸ்தானையும் விமர்சித்து டுவீட் செய்து இருந்தார்.

ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தனது ட்விட்டர் ப்க்கத்தில், ஜிம்பாப்வேவுக்கு இது மிகவும் சிறப்பான வெற்றி. வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என பாகிஸ்தானை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜிம்பாப்வே அதிபரின் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டுவீட்டில், எங்களிடம் நிஜமான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிஜமான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரபல மிஸ்டர் பீன் கதாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சென்றதோ பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் முகமுது என்ற போலி மிஸ்டர் பீன். இந்த நிகழ்வை குறிப்பிட்டு ஜிம்பாப்வே அதிபர், "நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்" என டுவீட் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்