போட்டிகளை வெல்வதற்கான உத்தரவாதத்தை உரிமையாளர்களால் கொடுக்க முடியாது - கே.எல். ராகுல்
|உரிமையாளர்கள் சிறந்த அணியை தேர்வு செய்தாலும் கூட ஒவ்வொரு போட்டியையும் வென்று விட முடியாது என்று கேஎல்.ராகுல் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தோல்வி அடைந்த பொழுது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேராக மைதானத்திற்கு வந்து கேப்டன் கேஎல்.ராகுல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது. இதன் பின் கோயங்கா தன்னுடைய வீட்டிற்கு வர வைத்து கேஎல்.ராகுலுக்கு விருந்து கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில் லக்னோ அணியை விட்டு கே எல் ராகுல் வெளியேற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் ஐபிஎல் உரிமையாளர்களால் போட்டியை வெல்வதற்கான உத்தரவாதத்தை கொடுக்க முடியாத என்று கே.எல்.ராகுல் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "வணிகப் பின்னணியில் இருந்து வரும் ஐபிஎல் உரிமையாளர்கள் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் எவ்வளவு சிறந்த வீரர்களை வாங்கி ஒரு அணியை உருவாக்கினாலும் கூட, எல்லா போட்டிகளையும் வெல்லும் உத்திரவாதத்தை அவர்களால் கொடுக்க முடியாது. ஒரு தனிப்பட்ட வீரருக்கு ஒரு குறிப்பிட்ட ஆண்டு மோசமானதாக இருக்கலாம். அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரராக சிறப்பாக விளையாட முடியாது" என்று கூறி இருக்கிறார்.