ஐபிஎல் தொடரில் இந்த வீரருக்கு சில ஆண்டுகளாக அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது - ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி கருத்து
|அவர் சிறந்த வீரர்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவரின் ஆட்டத்திறனுக்கு அதிகமாகவே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி டிவில்லியர்ஸ் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஐபிஎல் தொடரில் ஆட்டத்திறனுக்கு அதிகமாக சம்பளம் பெறும் வீரர் யார்? என்பது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு பதிலளித்த ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து வீரர் சாம் கரன் கடந்த சில ஆண்டுகளாக தன் ஆட்டத்திறனுக்கு அதிகமாக சம்பளம் பெற்றதாக கூறினார்.
இது தொடர்பாக ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில், இது பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் கூறுவதல்ல. ஆனால், என்னைப்பொறுத்தவரை சாம் கரன் கடந்த சில ஆண்டுகளாக தன் ஆட்டத்திறனுக்கு அதிகமாக சம்பளம் பெற்றுவந்தார். அவர் மோசமான வீரர் அல்ல. அவரை எனக்கு பிடிக்கும். அவர் உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினார். ஆனால், அது பல ஆண்டுகளுக்கு முன்பு.
சமீபத்திய ஐபிஎல் தொடர்களிலும், இங்கிலாந்து அணிக்காகவும் சாம் கரன் சிறப்பாக செயல்பட்டதாக எனக்கு தெரியவில்லை. அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சாம் கரனை அணி நிர்வாகம் விடுவித்துவிட்டு கிடைக்கும் பணத்தில் மற்றவீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்' என்றார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது இங்கிலாந்து வீரர் சாம் கரனை 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது. அதேதொகைக்கு அடுத்த ஐபிஎல் தொடருக்கு சாம் கரனை பஞ்சாப் அணி தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.