இந்த சீசனில் எங்கள் அணியின் சமநிலை மேம்பட்டுள்ளது - ஆர்.சி.பி. கேப்டன் ஸ்மிருதி மந்தனா
|டபிள்யூ.பி.எல். தொடரின் 2-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
பெங்களூரு,
பெண்கள் ஐ.பி.எல். எனப்படும் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. முதலாவது டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
இதனையடுத்து இந்த தொடரின் 2-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் பெங்களூரு அணியின் கேப்டனாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த சீசன் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில் "முதல் சீசனை விட இது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்கள் அணியிலிருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும் நாங்கள் புதிய வீரர்களை வாங்கியுள்ளோம். எனவே கடந்த சீசனை விட இந்த முறை அணியின் சமநிலை நிச்சயமாக மேம்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் நாங்கள் அணியில் இணைந்தோம். அதனால் மற்ற வீராங்கனைகளை பற்றி 90 சதவீதம் எங்களுக்கு தெரியாது. இந்த ஆண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது முக்கியம். அதனால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும்.
என்னுடைய தனிப்பட்ட இலக்கை பொறுத்த வரை கடந்த சீசனில் நான் எதிர்பார்த்த செயல்திறனை என்னால் வழங்க முடியவில்லை. இந்த முறை, கடந்த ஆண்டு தவறுகளை மீண்டும் செய்ய நான் விரும்பவில்லை. எங்களது பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. ஒரு கேப்டனாக இந்த முறை வீராங்கனைகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும்" என்று கூறினார்.