< Back
கிரிக்கெட்
எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ்

image courtesy: X (Twitter)

கிரிக்கெட்

எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் - டு பிளெஸ்சிஸ்

தினத்தந்தி
|
5 May 2024 11:28 AM IST

நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததுமே சற்று பதட்டம் ஏற்பட்டது என டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே கடந்த சில போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. களத்தில் எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மைதானத்தில் சற்று கூடுதல் பவுன்ஸ் இருந்தது. இந்த பிட்ச் எங்களுக்கு வழங்கப்படும் போது நான் பவுலர்களிடம் இந்த கூடுதல் பவுன்ஸ் பற்றி பேசியிருந்தேன். அந்த வகையில் பவுலர்களும் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

இந்த மைதானத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தாலும் எளிதாக கடந்திருக்க முடியும். ஆனாலும் நாங்கள் ஸ்கோர் போர்டை பார்க்காமல் உள்ளே சென்றதிலிருந்து எவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க விரும்பினோம். ஆனால் இடையில் நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததுமே சற்று பதட்டம் ஏற்பட்டது. அதனாலே சற்று பொறுமையாக சென்று போட்டி முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்