உலகக்கோப்பை தோல்வியை ஈடுகட்ட ரோகித்துக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது - சுனில் கவாஸ்கர் அறிவுரை
|இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
டி20 தொடர் நிறைவடைந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகக்கோப்பையில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக சாதனை படைக்க ரோகித் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த 6 முதல் 8 மாதங்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய உச்சகட்ட பார்மில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜேக் காலிஸ் சொன்னதுபோல இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக இருப்பார்.
அவர் 3, 4, 5 ஆகிய இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்திலேயே நன்றாக விளையாடி நல்ல அடித்தளத்தை கொடுக்க வேண்டும். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை சரி செய்வதற்கு ரோகித் சர்மாவுக்கு இது அற்புதமான வாய்ப்பாகும். இவ்வாறு கூறினார்.