வெளிநாட்டில் 'ஆபரேஷன்' - ஐ.பி.எல். தொடரை முழுமையாக தவற விடும் ஸ்ரேயாஸ் அய்யர்
|ஸ்ரேயாஸ் அய்யரின் காயத்துக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் போது முதுகின் அடிப்பகுதியில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அவருக்கு அளிக்கப்பட்டன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிற்பாதி ஆட்டங்களில் அவர் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டாக்டர்களின் பரிந்துரைப்படி 28 வயதான ஸ்ரேயாஸ் அய்யரின் காயத்துக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆபரேஷனுக்கு பிறகு காயத்தில் இருந்து அவர் முழுமையாக மீள்வதற்கு குறைந்தது 5 மாதங்கள் ஆகும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார். இதனால் அவர் ஐ.பி.எல். தொடரை முழுமையாக தவற விடுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்சின் கேப்டனாக இருந்த அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா அந்த அணியை தற்போது வழிநடத்துகிறார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஜூன் 7-ந்தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை. அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் திரும்புவதற்கு வாய்ப்புள்ளது.