காயத்திலிருந்து மீண்டு வரும் வீரர்கள் அதை செய்தால் மட்டுமே அணிக்கு தேர்வாக முடியும் - ஜெய்ஷா
|விராட், ரோகித்தை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் பிட்டாக இருந்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விராட், ரோகித்தை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் பிட்டாக இருந்தால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற கண்டிப்பான நிலையை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். அப்படி செய்யவில்லை என்றால் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் துலீப் கோப்பையில் விளையாட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவை 2023 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்ந்தெடுக்க ரஞ்சிக் கோப்பையில் வலுக்கட்டாயமாக விளையாட வைத்ததாகவும் ஜெய்ஷா கூறியுள்ளார். அதனால் காயத்திலிருந்து குணமடையும் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்காக தேர்வாக முடியும் என்ற நிலைமையை கொண்டு வந்துள்ளதாகவும் ஜெய்ஷா கூறியுள்ளார்.
அதனால் இந்திய வீரர்கள் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மதிப்பளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-"நாங்கள் கண்டிப்புடன் இருக்கிறோம். காயமடைந்து மீண்டு வந்தபோது ரவீந்திர ஜடேஜாவிடம் உள்ளூர் கிரிக்கெட்டில் சென்று விளையாடுமாறு நான்தான் சொன்னேன். எனவே காயத்திலிருந்து மீண்டு வரும் யாராக இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று விளையாடி தங்களுடைய பிட்னஸை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணிக்காக தேர்வாக முடியும்.
துலீப் கோப்பை அணிகளை பார்க்கும்போது விராட், ரோகித்தை தவிர்த்து மற்ற அனைவரும் விளையாட உள்ளனர். குறிப்பாக நான் எடுத்த கடினமான முடிவுகளாலேயே ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் துலீப் கோப்பையில் விளையாட உள்ளனர்" என்று கூறினார்.