இந்த 3 அணிகளில் ஒன்றுதான் உலகக்கோப்பையை வெல்லும் - ஜாக் காலிஸ் கணிப்பு
|தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாக் காலிஸ் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
புது டெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 32 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. ஆனாலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இன்னும் ஒரு வெற்றியை பதிவு செய்தால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை கைப்பற்றும் அணி எது? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஜாக் காலிஸ் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள மூன்று அணிகள் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்;- 'இம்முறை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளே இறுதிப்போட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதில் இந்திய அணிக்கே உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சொந்த மண்ணில் அவர்கள் விளையாடுவதாலும், ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும் என்பதாலும், மைதானத்தின் தன்மையை அவர்கள் எளிதில் கணித்து விளையாட முடியும் என்பதாலும் அவர்களுக்கே அதிக வாய்ப்புள்ளது.
மேலும் மூன்றாவதாக ஆஸ்திரேலியா மிகவும் ஆபத்தான அணியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்த அவர்கள் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதால் அவர்களும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாகவே நான் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.