இனிமேல்தான் உண்மையான விராட் கோலியை பார்ப்பீர்கள் - இர்பான் பதான் நம்பிக்கை
|பொதுவாகவே அழுத்தமான பெரிய போட்டிகளில் உயர்ந்து நிற்கக் கூடிய விராட் கோலி சூப்பர் 8 சுற்றில் அசத்துவார் என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது.
முன்னதாக நடப்பு தொடரின் லீக் சுற்றில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்க அணிகளுக்கு எதிராக அவர் 1, 4, 0 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் அவர் மீண்டும் 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் கடந்த டி20 உலகக்கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கிய அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார். ஆனால் இம்முறை துவக்க வீரராக களமிறங்கிய அவர் முதல் முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இந்நிலையில் பொதுவாகவே அழுத்தமான பெரிய போட்டிகளில் உயர்ந்து நிற்கக் கூடிய விராட் கோலி சூப்பர் 8 சுற்றில் அசத்துவார் என்று இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் லீக் சுற்று நடைபெற்ற அமெரிக்க மைதானத்தை விட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் தரமானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். எனவே அங்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஸ்பின்னர்களுக்கு எதிராக விராட் கோலி ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டுகளை அடித்து அசத்துவதை பார்க்க முடியும் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பெரிய போட்டிகளில் எப்படி உயர்ந்து நிற்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும் அல்லவா? அதுதான் அவரை மிகவும் ஸ்பெஷலாக உருவாக்குகிறது. குறிப்பாக பெரிய போட்டிகளில் நாம் விராட் கோலி அசத்தியதை பார்த்துள்ளோம். எனவே காத்திருந்து பாருங்கள். தற்போது ஸ்லாக் ஸ்வீப் அவருடைய பேட்டில் இருந்து வரும். கண்டிப்பாக அந்த ஷாட்டுகளை அவர் பயன்படுத்துவார். ஏனெனில் நியூயார்க் சூழ்நிலைகள் வேறு. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிலவும் சூழ்நிலைகள் வித்தியாசமானது. அங்கே நீங்கள் உண்மையான விராட் கோலியை பார்ப்பீர்கள்" என்று கூறினார்.