அதை செய்தால் மட்டுமே பாண்ட்யா ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் - பிரையன் லாரா
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத் - மும்பை இடையிலான ஆட்டத்தின்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டனர்.
அகமதாபாத்,
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இதில் மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த சீசனில் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மாவை நீக்கிய மும்பை அணி நிர்வாகம் அவருக்கு பதிலாக குஜராத் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் வீசுவதற்காக வந்தபோது அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் சேர்ந்து பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்தபோதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஒரு வீரருக்கு எதிராக ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். அதற்கு இந்தியாவுக்காக பாண்டியா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார்.
இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு.
கெவின் பீட்டர்சன்: "கேப்டனாக இருக்கும் பாண்ட்யா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் கேட்டதில்லை"
இயன் பிஷப்: "பாண்டியா இங்கே ரசிகர்களை வெல்ல முடியுமா? அவர்களின் மனதை மீண்டும் வெல்வதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்?"
பிரையன் லாரா: "இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை இங்கே விளையாடும்போது" என்று பாண்ட்யாவை கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இதற்கு கெவின் பீட்டர்சன் மற்றும் இயன் பிஷப் இருவரும் சிரித்தார்கள்