< Back
கிரிக்கெட்
ஒரு கோப்பை எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்காது - கோலி குறித்த கேள்விக்கு மந்தனா பதில்
கிரிக்கெட்

ஒரு கோப்பை எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்காது - கோலி குறித்த கேள்விக்கு மந்தனா பதில்

தினத்தந்தி
|
20 March 2024 9:37 AM IST

விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது சரியானது அல்ல என்று பெங்களூரு பெண்கள் அணியின் கேப்டன் மந்தனா கூறியுள்ளார்.

பெங்களூரு,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆர்.சி.பி. ஆண்கள் அணியினர் ஐ.பி.எல். தொடரில் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ளனர். ஆனால் பெண்கள் அணியினர் 2-வது ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளனர். அதே சமயம் பெண்கள் அணி 2-வது ஆண்டிலேயே கோப்பையை உச்சிமுகர்ந்து விட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பேட்டி அளித்த பெங்களூரு பெண்கள் அணியின் கேப்டன் மந்தனாவிடம், 'நீங்கள் பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை வென்று விட்டீர்கள். ஆனால் விராட் கோலி அதற்காக இன்னும் காத்து கொண்டு இருக்கிறாரே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மந்தனா கூறியதாவது:-

பட்டம் வெல்வதை வைத்து ஒருவரின் திறமையை மதிப்பிட முடியாது. விராட் கோலி இந்திய அணிக்காக படைத்துள்ள சாதனைகள் வியப்புக்குரியது. அதுதான் பெரிய விஷயம். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறேன், அவர் ஏற்கனவே எவ்வளவு சாதித்து உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்பதை பாருங்கள். இப்படிப்பட்ட நிலைமையில் இத்தகைய ஒப்பீடு சரியானது அல்ல. அதனால் தான் இருவரையும் ஒப்பிட்டு பேசுவதை விரும்புவதில்லை. அவர் எங்கள் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருக்கிறார்.

ஒரு கோப்பை எல்லா விஷயங்களையும் பிரதிபலிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கோலி மீது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது. சீருடை நம்பரை தேர்வு செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என்னுடைய பிறந்த தேதி 18. அதனால்தான் எனது சீருடையில் அந்த எண்ணை பொறித்துள்ளேன். நம்பரை வைத்து அவர் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார், நான் எப்படி ஆடுகிறேன் என்று வர்ணிக்க முடியாது. நிறைய விஷயங்களில் அவர் எங்களுக்கு உந்துசக்தியாக உள்ளார்.

நேர்மையாக சொல்வது என்றால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆண்கள் அணி கடந்த 16 ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட்டைதான் விளையாடி வந்திருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக ஆடவில்லை என்று சொல்ல முடியாது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை தனித்தனியாக நடத்துவதால் இரு அணிகளையும் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. அவர்கள் இதுவரை நன்றாகத்தான் செயல்பட்டுள்ளனர். நாங்களும் எங்களது பணியை நன்றாகவே செய்துள்ளோம்.

இவ்வாறு மந்தனா கூறினார்.

மேலும் செய்திகள்