நான் தேர்வு செய்த ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டையே மாற்றிவிட்டார் - ரவி சாஸ்திரி பெருமிதம்
|டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு பும்ரா மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
மும்பை,
இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.
மேலும் அந்த போட்டியில் வெளிப்படுத்திய செயல்பாடுகளின் காரணமாக ஐசிசி டெஸ்ட் டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அத்துடன் டெஸ்ட், ஒருநாள் டி20 ஆகிய 3 விதமான ஐசிசி டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.
முன்னதாக வித்தியாசமாக பந்து வீசும் பவுலிங் ஆக்சனை கொண்ட பும்ரா 2016-ல் அறிமுகமாகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தியபோது மிகவும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பும்ரா தற்போது நம்பர் 1 பவுலராக முன்னேறி தன் மீதான விமர்சனங்களை பொய்யாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்களை சந்தித்த பும்ராவை 2018-ல் தாம் பயிற்சியாளராக இருந்தபோது தேர்வு செய்ததாக ரவி சாஸ்திரி பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் தற்போது இந்திய கிரிக்கெட்டின் பவுலிங் துறையையே மாற்றி விட்டார் என்பதை நினைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-
"கொல்கத்தாவில் இருந்தபோது முதல் முறையாக அவரை நான் போனில் அழைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அப்போது அவரிடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது தம்முடைய வாழ்வின் மிகப்பெரிய நாள் என்று பும்ரா சொன்னார். அந்த சமயத்தில் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டர் என்ற பெயருக்குள்ளானார்.
இருப்பினும் சாதிக்க முடியும் என்ற பசி அவரிடம் இருந்தது எனக்கு தெரியும். அதனால் நீங்கள் தயாராக இருங்கள் உங்களை தென் ஆப்பிரிக்காவில் அறிமுகப்படுத்துகிறேன் என்று அவரிடம் சொன்னேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவர் தற்போது இந்திய கிரிக்கெட்டின் பவுலிங் துறையையே மாற்றி விட்டார்" என்று கூறினார்.