சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ரஹ்மனுல்லா குர்பாஸ்
|ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம் (105 ரன்) அடித்து அசத்தினார்.
இதையடுத்து 312 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியால் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 177 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன் 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சதம் அடித்த குர்பாஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை ( 7 சதம்) ரஹ்மனுல்லா குர்பாஸ் சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் டி காக் (தலா 8 சதம்) ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
23 வயதிற்குள் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்;
சச்சின் டெண்டுல்கர் - 8 சதம்
குயிண்டன் டி காக் - 8 சதம்
ரஹ்மனுல்லா குர்பாஸ் - 7 சதம்
விராட் கோலி - 7 சதம்
பாபர் அசாம் - 6 சதம்
உபுல் தரங்கா - 6 சதம்
நாளை நடைபெற உள்ள போட்டியில் குர்பாஸ் சதம் அடித்தால் 23 வயதிற்குள் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் டி காக் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.