< Back
கிரிக்கெட்
ஒரு நாள் அவர் 3 வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பார் - விக்ரம் ரத்தோர்
கிரிக்கெட்

ஒரு நாள் அவர் 3 வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருப்பார் - விக்ரம் ரத்தோர்

தினத்தந்தி
|
22 July 2024 7:46 PM IST

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்புதான் அபாரமாக செயல்பட்டதாக விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் டி20 அணியில் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்புதான் அபாரமாக செயல்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். அதுபோல சுப்மன் கில் இனிமேல்தான் இன்னும் அபாரமாக செயல்படுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதை விட சுப்மன் கில் வருங்காலத்தில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் அவர் கேப்டனாக நல்ல வேலையை செய்துள்ளார். அவர் நல்ல கேப்டன்ஷிப் திறமைகளை காண்பித்துள்ளார். ஒரு அணியை நீங்கள் வழி நடத்துவதற்கு அதுதான் மிகவும் முக்கியம். தற்போது துணை கேப்டன்ஷிப் பதவியை கொடுத்ததன் வாயிலாக பிசிசிஐ அவருக்கு எக்ஸ்ட்ரா பொறுப்பை கொடுத்துள்ளது. இந்த வேலையில் அவரும் அசத்துவார் என்று நான் உறுதியாக சொல்வேன். கேப்டன்ஷிப் பொறுப்புதான் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் இருந்து சிறந்த செயல்பாடுகளை கொண்டு வந்தது.

அதேபோல சுப்மன் கில்லும் அசத்துவார் என்று நான் கருதுகிறேன். இன்னும் கேப்டனாக நியமிக்கப் படாவிட்டாலும் தலைமை பொறுப்பில் இருப்பதே அவரிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை கொண்டு வரும். ஏனெனில் மற்ற வீரர்களை வழி நடத்தும்போது உங்களிடம் எக்ஸ்ட்ரா பொறுப்பு ஏற்படும். அது நல்லது. குறிப்பாக சுப்மன் கில் போன்ற இளம் வீரருக்கு அது சிறப்பானது. ஒரு நாள் அவர் 3 வகையான அணியையும் கேப்டனாக வழி நடத்துவார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்