ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 40 ஓவராக குறைக்க வேண்டும்: ஆரோன் பிஞ்ச் சொல்கிறார்
|ஒரு நாள் போட்டியில் ஓவரை குறைத்தால் தான் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், 'ரசிகர்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்க ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 50 ஓவரில் இருந்து 40-வது ஓவராக குறைத்தால் நன்றாக இருக்கும். 40 ஓவர் வடிவிலான போட்டியை பார்க்க ஆசைப்படுகிறேன்.
ஏற்கனவே இங்கிலாந்தில் புரோ 40 ஓவர் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 50 ஓவர் என்பது ரொம்பவே நீண்ட நேரம் இழுக்கிறது என்பது என்னுடைய கருத்து. அணிகளின் பந்து வீச்சு மந்தமாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட மணிக்கு 11 அல்லது 12 ஓவர்களே வீசுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், ஒரு நாள் போட்டியில் ஓவரை குறைத்தால் தான் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும். மேலும் போட்டியும் இன்னும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமையும்' என்றார்.