< Back
கிரிக்கெட்
ஒமர்சாய், முகமது நபி சதம் வீண்... இலங்கை அணி வெற்றி
கிரிக்கெட்

ஒமர்சாய், முகமது நபி சதம் வீண்... இலங்கை அணி வெற்றி

தினத்தந்தி
|
10 Feb 2024 1:24 AM IST

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி, ஒமர்சாய் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், சதமடித்து அசத்தினர்.

பல்லேகலே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வென்றது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகலேவில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்ணாண்டோ களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் பென்ணாண்டோ 88 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 16 ரன், சமரவிக்ரமா 45 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து அசலங்கா களம் இறங்கினார். ஒரு புறம் நிலைத்து நின்று ஆடிய நிசாங்கா ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா 136 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 381 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் நிசாங்கா 210 ரன்கள் அடித்தார். இதையடுத்து 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடியது.

ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை அனுபவ வீரர் முகமது நபி மற்றும் ஒமர்சாய் இருவரும் இணைந்து சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர். சிறப்பாக விளையாடி வந்த முகமது நபி 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் திரட்டியது. ஒரு கட்டத்தில் மோசமான தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்த அணியை இந்த ஜோடி மீட்டதுடன், வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றது. ஆனால் அவர்களால் அணியை வெற்றிபெறச்செய்ய முடியவில்லை.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 336 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஒமர்சாய் 149 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை தரப்பில் மதுஷன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்