ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் விலகல்
|ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் அய்யர் முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 4-வது நாளில் பேட்டிங் செய்யாமல் போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்களின் அறிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே முதுகு வலி பிரச்சினையால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை தவற விட்டு இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாக சில வாரங்கள் ஆகும் என்று தெரிகிறது.
இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளார். அத்துடன் வருகிற 31-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்ரேயாஸ் அய்யர் ஆடுவது சந்தேகம் தான். ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.