கடைசி ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி: தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்..!!
|ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.
கொழும்பு,
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்தது.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பஹர் ஜமான் 27 ரன்னிலும், இமாம் உல்-ஹக் 13 ரன்னிலும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாமுடன் கைகோர்த்தார். இருவரும் அரைசதம் அடித்ததுடன் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஸ்கோர் 162 ரன்னை எட்டிய போது பாபர் அசாம் 60 ரன்னில் (86 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித் கான் சுழலில் விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாஸ்சிடம் சிக்கி வெளியேறினார். அடுத்து வந்த சாத் ஷகீல் 9 ரன்னில் ரன்-அவுட் ஆனார். நன்றாக ஆடிய முகமது ரிஸ்வான் 67 ரன்னில் (79 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) பரீத் அகமது பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். கடைசி கட்டத்தில் வேகமாக மட்டையை சுழற்றிய அகா சல்மான் (38 ரன்கள், நாட்-அவுட்), முகமது நவாஸ் (30 ரன்கள்) நல்ல பங்களிப்பை அளித்தனர்.
50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் குல்படின் நைப், பரீத் அகமது தலா 2 விக்கெட்டும், பஜல்ஹக் பரூக்கி, முஜீப் ரகுமான், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் வெற்றி
பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. சற்று தாக்குப்பிடித்து ஆடிய ரியாஸ் ஹசன் 34 ரன்னிலும், ஷகிதுல்லா 37 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக ஆடிய முஜீப் ரகுமான் 64 ரன்னில் ஷகீன் ஷா அப்ரிடி பந்து வீச்சில் ஹிட் விக்கெட் முறையில் அவுட் ஆனார்.
48.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஷதப் கான் 3 விக்கெட்டும், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷகீன் ஷா அப்ரிடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தரவரிசையில் முதலிடம் பிடித்தது
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அத்துடன் பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது.