< Back
கிரிக்கெட்
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
17 Aug 2022 11:17 PM GMT

இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது.

ஹராரே,

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது. வெறும் 5 நாட்கள் இடைவெளியில் (ஆக.18, 20, 22-ந்தேதிகளில்) இந்த தொடரே முடிந்து விடும் என்றாலும் இது 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றாக அமைந்துள்ளது. அதாவது இதில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளி வழங்கப்படும்.

இதன்படி இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹராரேயில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தொடரில் இந்திய முன்னணி வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் தலைமையில் அணி களம் காணுகிறது. காயம் மற்றும் கொரோனா தொற்று பாதிப்பால் இரண்டு மாதம் ஒதுங்கி இருந்த ராகுல் உடல்தகுதியை எட்டியதால் கடைசி நேரத்தில் அணியுடன் இணைந்ததுடன் கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். அடுத்து வரும் ஆசிய கோப்பை போட்டிக்கு தனது உடல் தகுதி மற்றும் பேட்டிங் திறனை சோதித்துக்கொள்ளும் வகையில் இந்த தொடரை அவர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்.

பேட்டிங்கில் ராகுலுடன், ஷிகர் தவான், சுப்மான் கில், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் வலுசேர்க்கிறார்கள். பந்து வீச்சில் தீபக் சாஹர், முகமது சிராஜ், அக்‌ஷர் பட்டேல், குல்தீவ் யாதவ் மிரட்ட காத்திருக்கிறார்கள். குறிப்பாக முதுகுவலி காயத்தால் 6 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரின் பந்து வீச்சு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜிம்பாப்வே அணி ரெஜிஸ் சகப்வா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்த சிகந்தர் ராசா மற்றும் இன்னசென்ட் கையா, கேப்டன் சகப்வா ஆகியோர் தான் ஜிம்பாப்வே அணிக்கு பேட்டிங்கில் பிரதான வீரர்கள். இவர்கள் தாக்குப்பிடித்து மட்டையை சுழற்றினால் தான் அந்த அணியால் கவுரவமான நிலையை எட்ட முடியும். உள்ளூர் சூழலை பயன்படுத்தி பலம் வாய்ந்த இந்தியாவுக்கு முடிந்த வரை கடும் நெருக்கடி கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த மைதானத்தில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆடிய போது 304 ரன் மற்றும் 291 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது. இதை வைத்து ஆடுகளத்தன்மையை கணிக்கும் போது, தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கும், அதன் பிறகு பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 63 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 51-ல் இந்தியாவும், 10-ல் ஜிம்பாப்வேயும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் சமனில் முடிந்தது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன், தீபக் ஹூடா, அக்‌ஷர் பட்டேல், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது அவேஷ்கான்.

ஜிம்பாப்வே: தகுட்வனாஷி கைதானோ, டேடிவனாஷி மருமானி, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவிர், சிகந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா (கேப்டன்), ரையான் பர்ல் அல்லது டோனி முனியோங்கா, லூக் ஜாங்வி, பிராட் இவான்ஸ், விக்டர் யாச்சி, தனகா சிவாங்கா.

மேலும் செய்திகள்