ஒருநாள் கிரிக்கெட்; தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்...இலங்கையை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரேலியா
|ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
லீட்ஸ்,
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 74 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 202 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 68 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் பட்டியலில் இலங்கையை (13 வெற்றி) பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா (14 வெற்றி) 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்திலும் 21 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா அணியே உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் விவரம்:
ஆஸ்திரேலியா - 21 (ஜனவரி 2003 - மே 2003)
ஆஸ்திரேலியா - 14* (அக்டோபர் 2023 - செப்டம்பர் 2024)
இலங்கை - 13 (ஜூன் 2023 - அக்டோபர் 2023)
தென் ஆப்பிரிக்கா - 12 (பிப்ரவரி 2005 - அக்டோபர் 2005)
பாகிஸ்தான் - 12 (நவம்பர் 2007 - ஜூன் 2008)
தென் ஆப்பிரிக்கா - 12 (செப்டம்பர் 2016 - பிப்ரவரி 2017)