ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜாவின் கெரியர் முடிந்துவிட்டதா? - அஜித் அகர்கர் விளக்கம்
|ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், ஒருநாள் அணி ரோகித் சர்மா தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. இதையடுத்து ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் கெரியர் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா இந்திய ஒருநாள் அணியில் நீக்கப்படவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் அகர்கர் கூறியதாவது, 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் ஆகிய இருவரையும் அழைத்துச் செல்வது அர்த்தமற்றது. ஏனெனில் இருவரில் ஒருவர் கண்டிப்பாக பெஞ்சில் அமர்ந்தாக வேண்டும். ஜடேஜா டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவர் நீக்கப்படவில்லை.
ஆனால் நாங்கள் இலங்கைத் தொடருக்கு அவரை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அடுத்ததாக மிகப்பெரிய டெஸ்ட் தொடர் வர உள்ளது. இதை நாங்கள் இலங்கை தொடருக்கான அணியை அறிவித்த போதே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜடேஜா இப்போதும் ஒருநாள் அணியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார். அவர் எங்களுடைய முக்கிய வீரர். இவ்வாறு அவர் கூறினார்.