வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஜடேஜா-குல்தீப் யாதவ் சாதனை...!
|வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
பிரிட்ஜ்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 115 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஜடேஜா-குல்தீப் யாதவ் இணைந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் அவர்கள் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
அதாவது, இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு ஆட்டத்தில் 7 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல்முறை என்ற புதிய சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.