தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை - கம்மின்ஸ் பேட்டி
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 166 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் எய்டன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் கம்மின்ஸ் அளித்த பேட்டியில், தோனி களமிறங்கிய போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்த மைதானம் ஆட்டம் செல்ல செல்ல மெதுவாக இருந்தது. ஷிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். அதனால் அவருக்கு எதிராக நாங்கள் ஸ்லோ கட்டர்களை வீச விரும்பினோம். அந்த வகையில் அவரையும் வீழ்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினோம்.
முதலில் இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகளை பெறுவது தான் முக்கியம். அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலர்கள் பந்தவீச விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தற்போது அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவும் மிகச் சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் கொடுத்த சத்தமான ஆரவாரத்தை வேறு எங்கேயும் நான் கேட்டதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.