< Back
கிரிக்கெட்
அனைவரின் கண்களும் அந்த இரு ஆர்.சி.பி. வீரர்களின் மீதுதான் உள்ளன - ஹர்பஜன் சிங்
கிரிக்கெட்

அனைவரின் கண்களும் அந்த இரு ஆர்.சி.பி. வீரர்களின் மீதுதான் உள்ளன - ஹர்பஜன் சிங்

தினத்தந்தி
|
18 March 2024 5:20 PM IST

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றிருந்த பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்று நிறைவடைந்தது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டெல்லி அணியை வீழ்த்தி ஆர்.சி.பி. கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த வெற்றி தற்போது ஆர்.சி.பி. அணியின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் ஐ.பி.எல். துவங்கப்பட்ட 2008 முதல் ஆண்கள் ஆர்.சி.பி. அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. மூன்று முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் அதில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.

அந்த நிலையில் கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசனில் ஆர்.சி.பி. அணி சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் ஆண்கள் அணியை போலவே மகளிர் ஆர்.சி.பி. அணியும் கோப்பையை வெல்லாது என்று பலரும் கிண்டலடித்து வந்தனர். ஆனால் இம்முறை சிறப்பாக விளையாடி அதை உடைத்துள்ள மந்தனா தலைமையிலான ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் பெண்கள் ஆர்.சி.பி. அணி 2வது வருடத்திலேயே கோப்பையை வென்றுள்ளதற்கு ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பெண்களே கோப்பையை வென்று விட்ட நிலையில் ஆண்கள் ஆர்.சி.பி. அணியும் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார். அதற்கு மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகிய இருவரும் அசத்த வேண்டுமென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:-

"மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக பெண்கள் கோப்பையை வென்றுள்ளனர். அதேபோல இந்த வருடம் ஆர்.சி.பி. ஆண்கள் வரலாற்றை திருப்பி ஐபிஎல் கோப்பையை வெல்வார்களா? தற்போது அனைவருடைய கண்களும் விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் மீதுதான் உள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்