விராட், ரோகித் அல்ல...ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரர் இவர் தான் - கவுதம் கம்பீர் கருத்து
|இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் உள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பேட்ஸ்மேன்களான ரோகித்தும், விராட்டும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோகித் மற்றும் விராட் கோலியை விட ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்னை பொறுத்த வரை மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்து வருகிறார். ஆரம்பத்திலேயே காயத்தை சந்தித்த அவர் தம்முடைய இடத்திற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த நிலைமையில் சிறப்பாக விளையாடி வரும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சதமடித்தது அபாரமானதாகும். அவர் தான் இறுதிப்போட்டியில் மேக்ஸ்வெல் - ஜாம்பா ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.