< Back
கிரிக்கெட்
சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல...இந்திய அணிக்கு இவர் தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் - சுனில் கவாஸ்கர்
கிரிக்கெட்

சுழற்பந்து வீச்சாளர்கள் அல்ல...இந்திய அணிக்கு இவர் தான் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் - சுனில் கவாஸ்கர்

தினத்தந்தி
|
8 Feb 2023 10:49 AM IST

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது.

நாக்பூர்,

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் தான் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்த தொடரை இந்தியா கைப்பற்ற தீவிர முயற்சி செய்யும்.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடந்தால் அங்கு சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். அதே போல் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் ஆகிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலிய அணில் நாதன் லயன், ஆஷ்டன் அகர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எவ்வாறு தாக்கத்தை கொடுப்பார்களோ அதே போல் தான் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச் குறித்து பல குற்றச்சாட்டுகளை வைத்த போதும் நாக்பூரில் நடக்கும் முதல் போட்டியிலும் ஸ்பின்னுக்கு ஏற்ற வகையில் தான் பிட்ச் உருவாக்கப்படுகிறது. இதற்காக இந்தியாவை சேர்ந்த இளம் ஸ்பின்னர்களை வரவழைத்து ஆஸ்திரேலிய பேட்டர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நாதன் லயனை விட பேட் கம்மின்ஸ் தான் அச்சுறுத்தலாக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நாதன் லியோனை விட வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிப்பவராக இருப்பார். கம்மின்ஸ் முதன் முதலில் 5 விக்கெட் ஹவுல் எடுத்தது ஆசிய கண்டத்தில் தான். லியோன் ஒரு டாப் பவுலர் தான். எப்போதுமே அச்சுறுத்தல் தருபவர். ஆனால் இந்திய மண்ணில் கம்மின்ஸ் போன்ற அட்டகாச பவுலர் தான் எதிர்பார்க்காத தாக்கத்தை ஏற்படுத்துவார். அதனை கடந்த காலங்களில் பார்த்திருப்போம்.

ஆஸ்திரேலிய அணி இத்தனை நாட்களாக வெற்றிகரமாக இருக்கிறது என்றால், அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் செய்யும் பணிகள் தான் காரணம். ஜோஸ் ஹாசல்வுட் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் கம்மின்ஸை மட்டும் எப்படியாவது சமாளித்துவிட்டால், இந்தியாவுக்கு நல்லது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை இரு அணிகளும் அற்புதமான அணிகள். யார் வெற்றி பெறுவார்கள் என கணிப்பது கடினம். ஆனால் உள்ளூர் அணியை பொறுத்தவரை ரசிகர்கள் ஆதரவு, பிட்ச் தன்மை, வானிலை நிலவரம் ஆகியவற்றை எளிதாக கணிக்க முடியும் எனவே உள்ளூர் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் ஆட்டம் சமீப காலத்தில் மிகச்சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் கேப்டனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார். அவர் ஆட்டத்தை மாற்றக் கூடியவராக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்