ஸ்ரேயாஸ், ரிங்கு அல்ல.... இந்த வீரர்தான் கொல்கத்தா அணியின் துருப்பு சீட்டு - கம்பீர்
|கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு வெறும் அணியல்ல. அது ஒரு உணர்வாகும் என்று கம்பீர் கூறியுள்ளார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்த தொடரில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. கொல்கத்தா அணியில் ரசல், சுனில் நரின், ஸ்ரேயாஸ் ஐயர், ரிங்கு சிங் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இருப்பினும் இவர்களை விட கடந்த ஏலத்தில் ரூ. 24.75 கோடி என்ற வரலாற்றின் உச்சக்கட்ட தொகைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்தான் இம்முறை கொல்கத்தா அணியின் துருப்பு சீட்டு வீரராக இருப்பார் என்று கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கு முன் இஷான் கிஷன், சாம் கர்ரண் போன்ற வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால் அழுத்தத்திற்கு உள்ளாகி சுமாராக செயல்பட்டனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமாக விளையாடிய அனுபவத்தை கொண்ட ஸ்டார்க் அந்த அழுத்தத்தை சந்திக்க மாட்டார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
எனவே ஸ்டார்க் தங்களுடைய முதன்மை பவுலராக வெற்றிகளில் முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "அதிகப்படியான விலைக்கு வாங்கப்பட்டது அவருக்கு அழுத்தம் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய அதே செயல்பாடுகளை கொல்கத்தா அணிக்காகவும் அவர் வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்.
அவர் துருப்பு சீட்டு வீரர் என்பதை ஏற்கனவே நான் வீரர்கள் ஏலத்தின் மேஜையில் தெரிவித்துள்ளேன். அவர் தன்னுடைய தரத்தை ஐ.பி.எல். தொடரில் காண்பிப்பார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு வெறும் அணியல்ல. அது ஒரு உணர்வாகும். நானும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட்டு கொல்கத்தா பெருமையடையும் அளவுக்கு வெற்றி பெற முயற்சி செய்வேன்" என்று கூறினார்.