ஷகிப் அல்ல - அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளுக்கும் புது கேப்டனை நியமித்த வங்காளதேசம் - யார் தெரியுமா..?
|வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக காசி அஷ்ரப் ஹொசைன் லிபு நியமிக்கப்பட்டுள்ளார்.
மிர்பூர்,
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தின் 9-வது இயக்குநர்கள் கூட்டம் மிர்பூரில் இன்று நடைபெற்றது. இதில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பின் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களை சந்தித்த வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கூறியதாவது,
வங்காளதேச கிரிக்கெட் அணியின் அனைத்து விதமாக போட்டிகளுக்கும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேசிய அணியின் தலைமை தேர்வாளராக காசி அஷ்ரப் ஹொசைன் லிபு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாங்கள் ஷகிப்புடன் பேசினோம். அவருக்கு கண் பிரச்சனைகள் இன்னும் இருக்கின்றன. அது அவர் தேசிய அணிக்கு கிடைப்பதை நிச்சயமற்றதாக்குகிறது. இல்லையெனில், எல்லா வடிவங்களிலும் கேப்டனாக இருப்பதற்கான எங்கள் முதல் தேர்வாக அவர் இருந்திருப்பார்.
மேலும், வீரர்களின் இருப்பைப் பொறுத்து துணை கேப்டன் பதவி தீர்மானிக்கப்படும், தொடருக்குத் தொடர் மாறுபடும். தலைமை தேர்வாளர் லிபுவுடன் தேசிய அணி தேர்வாளர்களாக ஹன்னன் சர்க்கார் மற்றும் அப்துர் ரசாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அணியில் புதிய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் என இருவர் இருப்பார்கள். அவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.