< Back
கிரிக்கெட்
கோலி அவுட்டில் மட்டுமல்ல...சிக்சரிலும் நடுவர்கள் ஏமாற்றினார்களா..? ரசிகர்கள் விமர்சனம்
கிரிக்கெட்

கோலி அவுட்டில் மட்டுமல்ல...சிக்சரிலும் நடுவர்கள் ஏமாற்றினார்களா..? ரசிகர்கள் விமர்சனம்

தினத்தந்தி
|
22 April 2024 5:36 PM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களை குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு 221 ரன்கள் அடித்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குறிப்பாக கடைசி ஓவரில் கரண் சர்மா 3 சிக்சருடன் 20 (7) ரன்கள் போராடியும் வெற்றி காண முடியவில்லை. இந்த ஆட்டத்தில் சில சர்ச்சைகளும் அரங்கேறின.

இந்த போட்டியில் விராட் கோலி 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் ஹர்சித் ராணா புல்டாசாக வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேலே செல்வதுபோல் தெரிந்தது. இதனால் அவர் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ரிவியூவில் அவர் கீரிசுக்கு வெளியே நிற்பது தெரிந்தது. மேலும் ரிவியூவில் பந்தை அவர் அடிக்காமல் விட்டால் ஸ்டம்ப் லைனில் சரியாக செல்வதுபோல் தெரிந்தது. இதனால் கள நடுவர் தீர்ப்பின் படி விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதே போட்டியில் வருண் சக்கரவர்த்தி வீசிய 17-வது ஓவரின் 5வது பந்தில் பெங்களூரு வீரர் பிரபுதேசாய் பவுண்டரி அடித்தார். அந்தப் பந்து முதல் பார்வையில் பார்க்கும்போது பவுண்டரி எல்லையை தாண்டி விழுவது போன்றே தெரிந்தது. ஆனால் அதை சரியாக கவனிக்காத நடுவர்கள் 3-வது நடுவரின் உதவியையும் நாடாமல் சிக்சருக்கு பதிலாக பவுண்டரி என்று அறிவித்தனர்.

ஆனால் கடைசியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது. எனவே அந்த இடத்தில் 4 ரன்களுக்கு பதிலாக 6 ரன்கள் கொடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம் என்று தற்போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அந்த பந்தின் வீடியோவை கையிலெடுத்துள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் அதை பெரிதாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு "நன்றாக பாருங்கள் இது சிக்சர்" என்று நடுவர்களை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்