நசீம் ஷாவுக்கு காயம் ஏற்படவில்லை என்றால் இந்தியாவுக்கு தோல்வியா? -விமர்சனங்களுக்கு ஜடேஜா பதிலடி
|19வது ஓவரில் காயத்துடன் நசீம் ஷா வீசிய பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு விரட்டினார்.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கடந்த 28ம் தேதி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தானின் இளம் வீரர் நசீம் ஷா பந்துவீச்சில் அச்சுறுத்தலாக இருந்து வந்தார்.
கே.எல்.ராகுலை முதல் பந்திலேயே அவுட்டாகி அசத்திய இவர் சூர்யகுமார் யாதவை 18 ரன்களுக்கு அவுட்டாக்கி வெளியேற்றினார். சிறப்பாக பந்துவீசிய நசீம் ஷாவுக்கு ஆட்டத்தின் பாதியிலேயே காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் பந்துவீச அவர் சிரமப்பட்டார். 19வது ஓவரில் காயத்துடன் அவர் வீசிய பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு விரட்டினார். ஒருவேளை நசீமுக்கு காயம் ஏற்படவில்லை என்றால் இந்தியா தோல்வியடைந்திருக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஜடேஜா கூறுகையில், "நசீம் ஷாவுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும் என அர்த்தம் கிடையாது. ஒரு பந்துவீச்சாளர் அனுபவம் வாய்ந்த வீரராக இருந்தாலும், டி20யின் கடைசி 2-3 ஓவர்களில் அவருக்கு எப்போதும் அழுத்தம் இருக்கும்.
ஆட்டத்தில் நாங்கள் முடிந்தவரை 18 - 19வது ஓவர்களில் அதிக ரன்களை அடித்துவிட வேண்டும் என முடிவு செய்தோம். ஏனென்றால் கடைசி ஓவரில் அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்தவகையில் நாங்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றோம்" என தெரிவித்தார்.