விராட் மட்டுமல்ல.. யாராக இருந்தாலும் கொழும்பு மைதானத்தில் அசத்தியிருக்க முடியாது - தினேஷ் கார்த்திக்
|சுழலுக்கு அதிக சாதகமாக இருந்த கொழும்பு மைதானத்தில் 2வது இன்னிங்சில் யாருமே வெற்றிகரமாக பேட்டிங் செய்திருக்க முடியாது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 27 வருடங்கள் கழித்து இந்தியா இழந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்திருந்த நிலையில் 2 மற்றும் 3-வது போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவை தவிர்த்து விராட் கோலி உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமானார்கள்.
இந்நிலையில் சுழலுக்கு அதிக சாதகமாக இருந்த கொழும்பு மைதானத்தில் 2வது இன்னிங்சில் யாருமே வெற்றிகரமாக பேட்டிங் செய்திருக்க முடியாது என முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். எனவே விராட் கோலியின் ஆட்டத்தை நினைத்து ரசிகர்கள் கவலையடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். -
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா அல்லது யாராக இருந்தாலும் அசத்தியிருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் அங்கே புதிய பந்தில் 8 - 30 வரையிலான ஓவர்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். எனவே அதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. உலகில் பெரும்பாலான பிட்ச்கள் அப்படி இருக்காது. அது ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு கடினமானதாக இருந்தது. இங்கே நான் விராட் கோலிக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் கொழும்புவில் இம்முறை சுழலை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது" என்று கூறினார்.