பும்ரா அல்ல...உலகின் சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான் - சூர்யகுமார் யாதவ் பேட்டி
|ரஷீத் கான் தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
ஆண்டிகுவா,
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீட்டிக்கும். தோல்வி கண்டால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும்.
இந்நிலையில் ரஷீத் கான் தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் இதை முன்பே கூறியிருக்கிறேன், திரும்பவும் கூட சொல்கிறேன். ரஷீத் கான் காற்றில் பந்து வீசும் போது அவரது பந்தை எதிர்கொள்வது மிகவும் சிரமம்.
அதனால் அவருக்கு எதிராக என்ன மாதிரியான ஷாட்கள் விளையாடினால் நன்றாக இருக்கும் என்பதில் தெளிவாக இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர். நீங்கள் அவரை ஆதிக்கம் செலுத்த முடிவெடுத்தால் அவருக்கு முன்னால் நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.