பும்ரா அல்ல... எனக்கு பிடித்த 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இவர்கள்தான் - முகமது ஷமி
|தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இருவரையும் பிடிக்கும் என ஷமி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார்.
இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அதன் பின் எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முகமது ஷமி அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனக்கு பிடித்த 2 வேகப்பந்து வீச்சாளர்கள் யார்? என்பது குறித்து முகமது ஷமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிடித்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் நிறைய பேரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பேரை மட்டுமே சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் மற்றும் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இருவரையும் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.