ஆட்டநாயகன் விருதை மகன், மனைவிக்கு சமர்ப்பித்த வருண் சக்ரவர்த்தி..!
|ஆட்டநாயகன் விருதை அண்மையில் பிறந்த எனது மகன், மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை மீண்டும் வீழ்த்தி 3-வது வெற்றியை தனதாக்கியது. இதில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பின்னர் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி கூறுகையில், 'கடந்த ஆட்டத்தில் (சென்னைக்கு எதிராக) 49 ரன்கள் விட்டுக்கொடுத்தேன். ஆனால் இந்த ஆட்டத்தில் நன்றாக பந்து வீசி இருக்கிறேன். இது தான் வாழ்க்கை. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வித்தியாசமாக பந்து வீசுவதை விட துல்லியமாக பந்து வீசுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.
ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் பந்து வீச என்னை கேப்டன் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த மாதிரியான சவால் எனக்கு எப்போதும் பிடிக்கும். இந்த ஆட்டநாயகன் விருதை அண்மையில் பிறந்த எனது மகன், மனைவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். புதிதாக பிறந்த எனது மகனை இன்னும் பார்க்கவில்லை. ஐ.பி.எல். தொடருக்கு பிறகு பார்ப்பேன்' என்றார்.