< Back
கிரிக்கெட்
அந்த தமிழக வீரரை அடுத்த ஐ.பி.எல். ஏலத்தில் யாரும் வாங்க மாட்டார்கள் - சேவாக் விமர்சனம்

image courtesy: PTI

கிரிக்கெட்

அந்த தமிழக வீரரை அடுத்த ஐ.பி.எல். ஏலத்தில் யாரும் வாங்க மாட்டார்கள் - சேவாக் விமர்சனம்

தினத்தந்தி
|
29 April 2024 6:18 PM IST

நடப்பு ஐ.பி.எல். சீசனில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை குறைந்த எகனாமியில் பந்தும் வீசவில்லை என்று சேவாக் விமர்சித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். சீசனில் முன்னாள் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய முதல் 9 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் சஞ்சு சாம்சன் தலைமையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ள ராஜஸ்தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.

இந்த அணிக்கு சுழற்பந்து வீச்சு துறையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் ஜோடியாக எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சாஹல் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார். இருப்பினும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்து அசத்தினார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் சமீபத்திய வருடங்களாகவே அவர் பெரியளவில் விக்கெட்டுகளை எடுப்பதில்லை. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் குறைந்த ரன்களை கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுத்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் பெரிய அனுபவத்தை கொண்டுள்ள அஸ்வின் நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை குறைந்த எகனாமியில் பந்தும் வீசவில்லை என்று சேவாக் விமர்சித்துள்ளார். எனவே 2025 ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை எந்த அணியும் வாங்க மாட்டார்கள் என்று தெரிவிக்கும் சேவாக் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் அல்ல என்று கே.எல். ராகுல் சொன்னது போலவே இது அமைந்துள்ளது. அதாவது விக்கெட்டுகளை எடுக்கும்போது பந்து வீச்சில் எகனாமி முக்கியமல்ல என்று அஸ்வின் சொன்னார். ஆனால் புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லையென்றால் அடுத்த வருடம் அஸ்வினை ஏலத்தில் கூட யாரும் வாங்க மாட்டார்கள். ஒரு பவுலரை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது அவர் 25 - 30 ரன்களை மட்டும் கொடுக்க வேண்டும் அல்லது நிறைய விக்கெட்டுகளை எடுத்து 2 - 3 ஆட்டநாயகன் விருதுகளை வெல்ல வேண்டும் என்றே நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்.

சாஹல், குல்தீப் போன்ற அஸ்வினுடைய போட்டியாளர்கள் இங்கே விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். நாம் ஆப் ஸ்பின் பந்துகளை வீசினால் அடி வாங்குவோம் என்று அஸ்வின் நினைக்கிறார். அதனால் கேரம் பந்துகளை வீசும் அவர் விக்கெட்டுகள் எடுப்பதில்லை. எனவே விக்கெட்டுகளை எடுக்காமல் ரன்களை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தால் அஸ்வின் போன்றவருக்கு என்னுடைய அணியில் இடம் கிடைக்காது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்