< Back
கிரிக்கெட்
விராட் கிடையாது...ஆர்.சி.பி தோல்விக்கு காரணம் இது தான் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

விராட் கிடையாது...ஆர்.சி.பி தோல்விக்கு காரணம் இது தான் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
7 April 2024 1:34 PM IST

பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார்.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். ஆர்.சி.பிக்கு எதிராக பட்லர் நேற்று அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்த ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆர்.சி.பி தோல்வி அடைந்ததற்கு விராட் மெதுவாக விளையாடியதே காரணம் என ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தினேஷ் கார்த்திகை முன்கூட்டியே களமிறக்காததே தோல்விக்கு காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பெங்களூரு அணியின் தோல்விக்கு விராட் கோலி காரணம் என நான் சொல்ல மாட்டேன். அவர் புத்திசாலித்தனமாக விளையாடினார். அவரை சுற்றி வந்த பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை.

அதன் காரணமாக போதுமான நம்பிக்கையுடன் போதுமான சுதந்திரத்துடன் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாட வேண்டிய வேலையில் கச்சிதமாக செயல்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் ஆர்.சி.பி அணி களத்தில் 15 ரன்கள் எடுக்காமல் தவற விட்டது. அவர்களுடைய சில முடிவுகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

உங்களிடம் தினேஷ் கார்த்திக் பினிஷராக இருக்கிறார். அவர் மேக்ஸ்வெல்க்கு பின் ஏன் பேட்டிங் செய்ய வரவில்லை? என்பது எனக்கு தெரியவில்லை. அவர் கண்டிப்பாக கேமரூன் கிரீனுக்கு முன்னதாக பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும். எனவே அது புரிந்து கொள்ள முடியாத வித்தியாசமான முடிவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்