விராட், ரோகித், ஜெய்ஸ்வால் இல்லை.. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற அவர் முக்கியம் - பாக்.முன்னாள் வீரர்
|அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய பவுலர்களை களைப்படையை வைக்கும் திறமை புஜாராவிடம் இருப்பதாக பாசித் அலி தெரிவித்துள்ளார்.
லாகூர்,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றி பெற புஜாரா இந்திய அணியில் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். ஏனெனில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய பவுலர்களை களைப்படையை வைக்கும் திறமை புஜாராவிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போதைய நிலைமைப்படி அவரை கழற்றி விட்டால் அந்த பாரம் விராட் மற்றும் ரோகித் ஆகிய சீனியர்கள் மீது விழும் என்று தெரிவிக்கும் பாசித் அலி இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"துலீப் கோப்பையில் ரகானே, புஜாரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது அடுத்ததாக நடைபெறும் வங்காளதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை என்பதற்கான அறிகுறியாக தெரிகிறது. இருப்பினும் புஜாரா இல்லாமல் இந்திய பேட்டிங் வரிசை ஆஸ்திரேலியாவில் பிரச்சினையை சந்திக்கும். ஒருவேளை புஜாராவும் இருந்தால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும்.
ஒருவேளை புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லையெனில் இந்திய பேட்டிங் பெரும்பாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்களை அதிகமாக சார்ந்திருக்க வேண்டும். அத்தொடரின் முடிவு எதுவாக இருந்தாலும் இந்தியா புஜாராவை மிஸ் செய்வார்கள். ஏனெனில் அவர் எதிரணி பவுலர்களை களைப்படையை வைத்து எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் ரன் குவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வீரர்" என்று கூறினார்.