விராட் இல்லை... ரோகித்துக்கு பின் அவர்தான் இந்தியாவின் 2-வது சிறந்த பேட்ஸ்மேன் - முன்னாள் வீரர் கருத்து
|விராட் கோலி ஸ்பின்னர்களிடம் தொடர்ந்து 3 முறை அவுட்டானது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
கொழும்பு,
இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதனால் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்று இலங்கை அசத்தியுள்ளது.
இந்த தோல்விக்கு இலங்கையின் ஸ்பின்னர்களை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. ரோகித் சர்மா தவிர இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சுப்மன் கில், விராட் கோலி ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் சோபிக்க தவறினர்.
அதிலும் குறிப்பாக விக்கெட்டுகள் விழும்போதெல்லாம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடி வெற்றி பெற வைப்பார். ஆனால் தன்னுடைய 15 வருட ஒருநாள் கெரியரில் முதல் முறையாக இத்தொடரில் விராட் கோலி 3 போட்டிகளிலும் ஸ்பின்னர்களிடம் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் இத்தொடரில் ரோகித் சர்மாவுக்கு பின் அக்சர் படேல்தான் இந்தியாவுக்கு அதிக ரன்கள் அடித்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் மிகவும் எதிர்பார்த்த விராட் கோலி ஸ்பின்னர்களிடம் தொடர்ந்து 3 முறை அவுட்டானது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நம்புகிறீர்களோ இல்லையோ இந்தத் தொடரில் ரோகித் சர்மாவுக்குப் பின் அக்சர் படேல்தான் நம்முடைய 2வது சிறந்த பேட்ஸ்மேன். மறுபுறம் விராட் கோலி 3 இன்னிங்சில் 3 முறை ஸ்பின்னர்களுக்கு எதிராக எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக அது எப்போது நடந்தது என்று எனக்குத் நினைவில்லை. இத்தொடரில் தவறான லைனில் விளையாடிய அவர் ஒவ்வொரு முறையும் ரிவியூ எடுத்தார்.
அவரால் இந்தத் தொடரில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய வீரராக கருதப்படுகிறார். ஆனால் அவரும் 2 முறை ஸ்பின்னர்களிடம் அவுட்டானார். ஸ்பின்னர்களுக்கு எதிராக அசத்தக்கூடிய நமது வீரர்கள் இப்படி சுமாராக செயல்பட்டுள்ளார்கள். அதனால் நமது அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார்.