டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக வெற்றி பெற முடியாது - தோல்விக்கு பின் கம்மின்ஸ்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் தோல்வி அடைந்தது.
ஐதராபாத்,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடரின் 41-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடந்த பல போட்டிகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் எளிதாக பெங்களூரு அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 171 ரன்களை மட்டுமே அடித்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் :
இன்றைய இரவு எங்களுக்கான இரவாக அமையவில்லை. பந்துவீச்சில் சில ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதேபோன்று பேட்டிங்கிலும் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை துவக்கத்திலேயே இழந்ததால் எங்களால் இலக்கை நோக்கி வெற்றிகரமாக செல்ல முடியாமல் போனது. முதலில் பேட்டிங் செய்தால் எங்களால் நிறைய ரன்களை அடிக்க முடிகிறது. அதுதான் எங்களது அணிக்கு வேலையும் செய்கிறது.
ஆரம்பத்தில் சில வெற்றிகளை பெறுவதற்கு முன்னதாக நாங்கள் முதலில் பந்து வீசினால் வெற்றி பெறுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் அது எங்கள் வழியில் செல்லவில்லை. அதன் பின்னர் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்று வந்தோம். இந்நிலையில் தற்போது மீண்டும் தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது. இந்த குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.