< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இப்போது யாரும்  விரும்பமாட்டார்கள்- ஹெய்டன் எச்சரிக்கை

Image Courtesy: AFP  

கிரிக்கெட்

"பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இப்போது யாரும் விரும்பமாட்டார்கள்"- ஹெய்டன் எச்சரிக்கை

தினத்தந்தி
|
7 Nov 2022 7:16 PM IST

தற்போதைய நிலையில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் என ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. அதே போல் நாளை மறுதினம் நடக்கவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதன் சூப்பர் 12 லீக் சுற்றில் நேற்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியால் தென் ஆப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதலில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, பின்னர் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை சந்தித்ததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதன்பின் பாகிஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்று தற்போது வலுவாக உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், பாகிஸ்தான் அணி அச்சுறுத்தலாக மாறிவிட்டது என அரையிறுதியில் உள்ள மூன்று அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹெய்டன் கூறுகையில் " முதல் இரண்டு போட்டிகளில் நாங்கள் தோற்றபின், இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிடுவோம் என்ற சாத்தியக்கூறான யோசனைகள் இருந்தன. ஆனால், அந்த நிலையில் பாகிஸ்தான் வீறுகொண்டு சூப்பர் பார்முக்கு திரும்பிய தருணம், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளனர்.

இந்த போட்டியில் உலகின் எந்தவொரு அணியும் தற்போதைய நிலையில், பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள விரும்பமாட்டார்கள். நாம் அரையிறுதியில் இருப்பதை யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது நாம் அரையிறுதியில் இருக்கிறோம். நெதர்லாந்து அணி இல்லையென்றால், ஒருவேளை நாங்கள் இங்கே இல்லாமல் இருந்திருக்கலாம். மற்ற அணிகள் பாகிஸ்தானை வெளியேற்ற நினைத்தார்கள். தற்போது அவர்கள் பாகிஸ்தானை தோற்கடிக்கப் போவதில்லை" என்றார்.

மேலும் செய்திகள்