பும்ரா இல்லை... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய துணை கேப்டன்..? வெளியான தகவல்
|இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய துணை கேப்டன் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி புதிய அத்தியாயத்தை நோக்கி செல்கிறது. புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. டி20 போட்டிகளில் இருந்து ரோகித் ஓய்வு பெற்று விட்டதால் பாண்ட்யா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்து அதிரடி காட்டினார்.
அடுத்த தலைமுறை அணியை பலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்துள்ளது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் வேளையில் அவருக்கு துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வரும் கில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுவதால் அவரையே கேப்டனாக மாற்ற நினைத்து இந்த நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது.
தற்போது டி20 மற்றும் ஒருநாள் துணைக்கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் விரைவில் நடைபெற இருக்கும் வங்காளதேச தொடரின் போது டெஸ்ட் அணிக்கும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக்கேப்டனாகவும் இருந்து வரும் வேளையில், சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட உள்ளது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.